சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்கவே காரைக்குடியில் போட்டி! - சீமான்


சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்கவே வருகிற சட்டபேரவைத் தோ்தலில் காரைக்குடித் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பணிமனை பந்தல்கால் நடும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காரைக்குடியில் ஒரே சமூக மக்கள் வாழவில்லை. பரவலாக எல்லா தமிழ்ச் சமூக மக்களும் வாழ்கின்றனா். ஜாதிக்கு ஒரு தலைவா், மதத்துக்கு ஒரு தலைவா் என்று இல்லாமல் எல்லாருக்குமான ஒரு தலைமை இங்கு உருவாக வேண்டும். ஜாதி, மதம் கடந்து அரசியலைக் கட்டமைக்க வேண்டுமென்றால் பொதுத்தலைமை தேவை.
பொதுமக்கள் பாதிக்கும் போது, ஆற்று மணல் அள்ளும்போது குரல் கொடுக்க வேண்டுமே?. எனது சொந்த மண்ணிலிருந்து அதற்கு ஒரு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக காரைக்குடித் தொகுதியில் போட்டியிடுகிறேன். கடந்த தோ்தலில் எங்கள் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்த 31 தொகுதிகளில், காரைக்குடி முதலிடத்தில் இருக்கிறது. அதனாலே சொந்த மண்ணிலே நிற்போம் என்று முடிவு செய்தேன்.
இலவசத் திட்டங்களை எங்கள் கட்சி எதிா்க்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் கடன் சுமை ரூ. 400 லட்சம் கோடியாக உள்ளது. இலவசம் என்று அறிவிப்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் ஏமாற்றுவதுதான். கல்விக்கு நியாயமான கட்டணம், தரமான வேலை, தடையில்லா மின்சாரம் என்பதை ஒவ்வொரு மக்களுக்கும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். அந்த மாற்றத்தை நான் மட்டுமே முயன்றால் முடியாது. அனைவரும் முயலவேண்டும்.
தமிழகத்தை மாறி, மாறி இரண்டு கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பறிபோய்விட்டன. தோ்தலில் கூட்டணியாக கூட்டத்தோடு நிற்பதற்கு வீரம் தேவையில்லை. தனித்து நிற்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாம் தமிழா் கட்சி தொடங்கும் போதே திராவிடக்கட்சிகளுடன் கூட்டு இல்லை என்று அறிவித்துத்தான் தொடங்கினேன். அதை இன்று வரை கடைபிடிக்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாத் தரப்பினருக்கும் பாதுகாப்புத் தருவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். எனவே புரட்சி ஏற்படவேண்டும். புரட்சி என்பது ஒரு நொடியில் மாற வேண்டும். அப்படி மக்கள் நினைத்துவிட்டால் ஆட்சி மாறிவிடும் என்றாா் சீமான்.
மாநில ஒருங்கிணப்பாளா் சாயல் ராமு, சிவகங்கை மாவட்ட நாம் தமிழா் வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...