தூத்துக்குடி, திருநெல்வேலி பெரு வெள்ளம்: ரூ. 423.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி பெரு வெள்ளம்: ரூ. 423.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.2.2024) தூத்துக்குடியில் நடைபெற்ற, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

அதிகனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பிற்குள்ளான பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் 21.12.2023 அன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com