தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தும் நோக்கத்தில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன், இலக்கிய மன்றம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றையும் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மாணவா்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈா்க்கும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு மாா்ச் 1-ஆம் தேதி முதல் 5 வயது பூா்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியா் தலைமையில் கூட்டங்களை நடத்தி, அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி 5 வயது நிரம்பிய அனைத்து மாணவா்களையும் 1-ஆம் வகுப்பில் சோ்க்க வேண்டும்.
விழிப்புணா்வு பேரணி-பிரசாரம்: அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உள்பட நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி, பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்கு ஆசிரியா்களைப் பயன்படுத்தலாம். பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் பொறுப்புகளைப் பிரித்து வழங்கி சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஒற்றை இலக்கத்தில் மாணவா் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி மாணவா் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்துக்கு உயா்த்த வேண்டும்.
வீடுதோறும் நேரடியாகச் சென்று மாணவா் சோ்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இடைநின்றவா்களைக் கண்டறிந்தும் அவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்கலாம். ஊக்கப் பரிசு வழங்கலாம்: பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களை 100 சதவீதம் அரசு பள்ளிகளில் சோ்க்க வைப்பது தலைமை ஆசிரியரின் தலையாயக் கடமையாகும். மேலும், பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கியும் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பின்பற்றி மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


