வெளிநாட்டுப் பாணியில்.. 12 மாடிக் கட்டடத்துக்குள் மெட்ரோ ரயில் பாதை

வெளிநாடுகளில் பார்த்திருப்போம்.. ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு தளத்தில் மட்டும், ரயில் பாதை அமைக்கப்பட்டு, அந்த கட்டடத்துக்குள் ரயில் நுழைந்து செல்லும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வெளிநாடுகளில் பார்த்திருப்போம்.. ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு தளத்தில் மட்டும், ரயில் பாதை அமைக்கப்பட்டு, அந்த கட்டடத்துக்குள் ரயில் நுழைந்து செல்லும்.

இந்தக் காட்சியை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்னை திருமங்கலத்திலும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

அதாவது, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் திருமங்கலம் பகுதியில் ஒரு 12 மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு, அந்த கட்டடத்துக்குள் ரயில் நின்று செல்லும் வகையில் ரயில் நிலையமும் அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ரயில் நிலையம் அமையும் பகுதியை மேம்படுத்தவும், அருகே மக்கள் வசிப்பதை அதிகரிக்கவும் வகையில், ஒரு ரயில் நிலையம் அமைப்பதைவிட, அடுக்குமாடிக் கட்டடத்தில் ரயில் நிலையம் அமைத்து, மற்ற தளங்களை வாடகைக்கு விடுவது வருவாய்க்கும் வழி வகுக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோயம்பேடு, திருமயிலை பகுதிகளிலும், ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் 12 மாடிக் கட்டடத்தில் அமையும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பாதை உருவாக்கத்தின்போது, அப்பகுதியில் கட்டடங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில், ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அந்த வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மூன்று இடங்களில், அடுக்குமாடிக் கட்டடங்களுக்குள் ரயில் பாதை அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில், ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் மூன்று வீடுகள் மட்டும் ரயில் பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது, திருமங்கலம் மேம்பாலத்துக்கு மேலே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கலாம். ஆனால், தற்போதிருக்கும் மேம்பாலத்தை அகற்றினால்தான் அதனை செய்ய முடியும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமயிலையில், ஐந்து நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஒன்று அடுக்குமாடிக் கட்டடத்தில் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சீனாவின் சோங்குவிங் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. நாக்பூரிலும், 15 தளங்களைக் கொண்ட நட்சத்திர ஹோட்டலில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டும் அமைப்பதைவிட அடுக்குமாடிக் கட்டடங்களை அமைத்து, அதனை வணிக நிறுவனங்களாக மாற்றினால்தான் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக செய்த செலவை ஈடுசெய்ய முடியும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com