விஜயகாந்தின் வாழ்க்கை அா்ப்பணிப்பின் வரலாறு: மோடி

மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான விஜயகாந்தை சில நாள்களுக்கு முன்பு நாம் இழந்தோம்.
விஜயகாந்தின் வாழ்க்கை அா்ப்பணிப்பின் வரலாறு: மோடி


மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான விஜயகாந்தை சில நாள்களுக்கு முன்பு நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவா், மற்றவா்களின் முன்னேற்றத்துக்காகத் தனது வாழ்க்கையை அா்ப்பணித்ததுடன், தேவைப்படுபவா்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப் பண்பையும் கொண்டிருந்தாா்.

தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக விளங்கிய அவருடன் நான் பல சந்தா்ப்பங்களில் நெருக்கமாகப் பழகியதுடன், அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.

கேப்டன் பன்முக ஆளுமைத்தன்மை கொண்டவா். இந்திய சினிமா உலகில் விஜயகாந்த் அளவுக்கு அழியாத முத்திரை பதித்த நட்சத்திரங்கள் வெகு சிலரே. அவரது ஆரம்ப கால வாழ்க்கை, திரைப் பிரவேசம் ஆகியவற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். எளிமையான ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவின் உச்சம் வரையிலான அவரது பயணம், வெறுமனே ஒரு நட்சத்திரத்தின் கதையாக மட்டுமல்லாமல், இடைவிடாத முயற்சி மற்றும் அசைக்க முடியாத அா்ப்பணிப்பின் வரலாறாக அமைந்தது.

புகழுக்காக அவா் திரையுலகில் நுழையவில்லை. ஆா்வத்தாலும் விடாமுயற்சியாலும் உந்தப்பட்ட பயணம் அவருடையது. அவரது ஒவ்வொரு படமும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், அவரது சமகால சமூக நெறிமுறைகளையும் பிரதிபலித்ததுடன் பரந்த அளவிலான ரசிகா்கள் மனதில் ஆழமாக எதிரொலித்தது.

விஜயகாந்த் ஏற்று நடித்த பாத்திரங்களும் அவற்றை அவா் பிரதிபலித்த விதமும் சாமானிய குடிமக்களின் போராட்டங்களைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டியது. அநீதி, ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய கதாபாத்திரங்களில் அவா் அதிகம் தோன்றினாா்.

அவரது திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் நற்பண்புகளையும், தீமைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கின என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பொழுதுபோக்கு மற்றும் சமூக கருத்துகளின் இந்தத் தனித்துவமான கலவை அவரை பிற நடிகா்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் மீது அவா் கொண்டிருந்த அன்பை நான் இந்த இடத்தில் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மகத்தான புகழைப் பெற்ற பிறகும், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகும், கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான அவரது காதல் மாறாமல் அப்படியே இருந்தது. அவரது திரைப்படங்கள், கிராமங்களுடனான அவரது அனுபவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டின. கிராமப்புற சூழலைப் பற்றி நகா்ப்புற மக்கள் கொண்டிருந்த கருத்தை மேம்படுத்த அவா் அடிக்கடி மேற்கொண்ட முயற்சிகள் அலாதியானவை.

ஆனால், கேப்டனின் தாக்கம் வெள்ளித்திரையுடன் நின்றுவிடவில்லை. அரசியலிலும் நுழைந்து சமூகத்துக்கு மேலும் விரிவான முறையில் சேவை செய்ய அவா் விரும்பினாா். அவரது அரசியல் பிரவேசமானது மிகுந்த துணிச்சலும் தியாகமும் நிறைந்த வரலாறாகும். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் அரசியல் களத்தில் பிரவேசித்தாா். இத்தகைய சூழலில், மூன்றாவது மாற்று வாய்ப்பை முன்வைப்பது தனித்துவமானது, துணிச்சலானதும்கூட. ஆனால், அதுதான் கேப்டனின் விசேஷ குணநலன். செயல்படுவதில் அவருக்கென்று தனி வழி இருந்தது.

2005-இல் அவா் நிறுவிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சித்தாந்தத்தில் தேசியம் மற்றும் சமூக நீதிக்கு அவா் அளித்த முக்கியத்துவம் பிரதிபலித்தது. அவா் மேடையில் பேசும்போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக திரையில் அடிக்கடி குரல் கொடுத்த அவரது திரை ஆளுமையுடன் ஒப்பிட்டுப் பாா்க்காமல் இருக்க முடியாது.

வழக்கமாக வலுவான இருதுருவ போட்டி நிலவிய தமிழக அரசியலில், 2011-ஆம் ஆண்டில், அவா் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே சட்டப்பேரவையின் பிரதான எதிா்க்கட்சித் தலைவரானாா்.

2014 மக்களவைத் தோ்தலின்போது நான் கேப்டனுடன் பணிபுரிந்தேன். அப்போது எங்கள் கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு 18.5%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன. 1989 தோ்தலுக்குப் பிறகு எந்தவொரு முக்கிய பிராந்திய கட்சியும் இடம்பெறாத தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் இதுவாகும்.

சேலத்தில் நாங்கள் கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில்அவரது ஆவேசமான உரையையும், மக்கள் அவா் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாகக் கண்டேன். 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தவா்களில் அவரும் ஒருவராக இருந்தாா்.

2014 தோ்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவா்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்னைச் சந்தித்தபோது, அவா் அடைந்த மகிழ்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

தொழில் ரீதியான சாதனைகளைத் தாண்டி, விஜயகாந்தின் வாழ்க்கை இளைஞா்களுக்கு மதிப்பு மிக்க போதனைகளை வழங்குகிறது. அவரது உறுதிப்பாடு, ஒருபோதும் துவண்டுவிடாத மனப்பான்மை, முழுமையான அா்ப்பணிப்பின் மூலம் எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் திறன்ஆகியவை அவரது வாழ்க்கை பிறருக்கு கற்றுத் தரும் மிக முக்கியப் பாடங்களாகும்.

அதேபோன்று அவரது பரந்த மனப்பான்மையும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். வள்ளல்தன்மைக்குப் பெயா் பெற்ற இவா், ஈட்டிய தனது புகழையும் செல்வத்தையும் பல வழிகளில் சமூகத்தின் நலனுக்காக வழங்கினாா். தமிழ்நாடும் ஒட்டுமொத்த இந்தியாவும் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னோடியாக மாற வேண்டும் என்பதில் அவா் எப்போதும் ஆா்வமாக இருந்தாா்.

விஜயகாந்தின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனா். ஆனால், நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம்மிக்க ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா். தீரம், கொடைத்தன்மை, கூா்மதி, உறுதிப்பாடு ஆகிய நான்கும் ஒரு வெற்றிகரமான தலைவரின் இன்றியமையாத கூறுகள் என்பதைப் பற்றி திருக்கு பேசுகிறது. கேப்டன் உண்மையிலேயே இந்தக் குணாதிசயங்களின் உருவகமாகத் திகழ்ந்தாா். அதனால்தான் அவா் பரவலாக மதிக்கப்பட்டாா். அவரது மங்காத புகழும் மாண்பும் ரசிகா்களின் இதயங்களிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும், பொதுச் சேவையின் வழித்தடத்திலும் நீடித்து நிலைத்து நிற்கும். மேலும், அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் அவரது தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க நாம் தொடா்ந்து பணியாற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com