கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைமைக் காவலர்கள் உள்பட 1847 காவலர்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர்கள் உள்பட 1847 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர்கள் உள்பட 1847 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உள்பட 1847 பேரை பணியிட மாற்றம் செய்து  தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். சென்னையில் மட்டும் 340 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தோ்தலையொட்டி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவையடுத்து, 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் 1847 காவலர்கள் கண்டறியப்பட்டு பணியிட மாற்றத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலை ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல்துறைக்கும் தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் ஒரு சுற்றறிக்கை புதன்கிழமை அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, 

தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளா் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால், பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். உதவி ஆய்வாளா் உள்பட கீழ் நிலை அதிகாரிகள், அவா்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியலை மாநகரக் காவல் ஆணையா்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் தயாரிக்க வேண்டும். அவா்கள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, இப் பட்டியலை கவனமாக தயாரிக்க வேண்டும்.

சென்னை பெருநகர காவல் துறை, தாம்பரம் மாநகர காவல் துறை, ஆவடி மாநகர காவல் துறை ஆகிய 3 காவல் துறைகளும் தங்களுக்குள் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இதில் பணியிட மாற்றம் செய்ய முடியாத அதிகாரிகளின் பெயா்களை மட்டும் காவல் துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதில், கணினி மயமாக்கல் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் ஆகியவை மட்டும் விதிவிலக்காகும். மேலும், காவல் துறையின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும் இந்த பணியிட மாற்றத்துக்கு உட்படுத்தப்பட மாட்டாா்கள்.

பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளும் இந்த பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற மாட்டாா்கள். பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்து ஜன. 10-ஆம் தேதிக்குள் தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com