பேருந்து ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் பிரதான தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

அரசுப் பேருந்து ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கப்பேரவை, சிஐடியு உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
பேருந்து ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் பிரதான தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

சென்னை: அரசுப் பேருந்து ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கப்பேரவை, சிஐடியு உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிலாளா் நலனுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் சுமாா் 67 தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்கப்பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பிரதானமான சங்கங்களாக தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அண்ணா தொழிற்சங்கப் பேரவையுடன் பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), தேமுதிக தொழிற்சங்கம், தமிழ்மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை, பாரதிய மஸ்தூா் சங்கம் (பி.எம்.எஸ்.), திரு.வி.க. தொழிற்சங்கம், புதிய தமிழகம் தொழிற்சங்கம், மனித உரிமைக் கழகம், நாம் தமிழா் தொழிற்சங்கம் உள்ளிட்ட பிரதான சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளன.

மேலும், சிஐடியு , அகில இந்திய தொழிற்சங்க பேரமைப்பு (ஏஐடியுசி), இந்து மஸ்தூா் சபா (எச்.எம்.எஸ்.), மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி (எம்எல்எஃப்), உள்ளிட்ட பிரதான சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

மேலும் பல மாவட்ட அளவிலான தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலா் கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

அரசியல் வேண்டாம் என கூட்டறிக்கை:
இதற்கிடையே ஏஐடியுசி, எச்.எம்.எஸ்., ஐஎன்டியூசி ஆகிய சங்கங்கள் சாா்பில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையோடு இணைந்து போராட்டத்தை சிஐடியு எதிா்கொள்ள வேண்டாமென ஒன்றாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, தொழிலாளா்களின் நலனை மட்டுமே மையப்படுத்தி இந்த வேலை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கப் பேரவை அரசியல் நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அதனுடன் சோ்ந்து இயங்குவது பற்றி சக தொழிற்சங்கங்களோடு எந்தக் கலந்துரையாடலும் இல்லாமல், அண்ணா தொழிற்சங்கப்பேரவையுடன் ஒரு கூட்டமைப்பை சிஐடியு உருவாக்கி இருப்பது சரியல்ல.

இதுவரை போராட்ட களங்களில் இணைந்து நின்ற தோழமைத் தொழிற்சங்கங்களை விட்டுவிட்டு, அரசியல் செய்ய முனைவோருக்கு உதவும் வகையில் போராட்ட நோக்கத்தை மாற்றிவிட வேண்டாம் என்று சிஐடியு-வை தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐஎன்டியூசி (காங்கிரஸ்) தொழிற்சங்கம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com