இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும்: மு.க. ஸ்டாலின்

இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்


இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின், திமுகவினருக்கு தமிழர் திருநாள் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

அதில், உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிக்ஜாம் மழை - வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது அரசு. 

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன.  

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது அரசு.

எப்போதும் பொங்கல் அன்று கட்சியினர் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய மத்திய அரசில் சமூகநீதி – சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.

உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com