ஸ்ரீரங்கத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மனமுருக சுவாமி தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பூரண கும்ப மரியாதை, ஆண்டாள் யானையிடம் ஆசி என கோயில் தரிசனத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார்.

இன்று காலை திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அரங்கநாதர் கோயிலின் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர்கள் தலைமையில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். 

பின்னர், கோயிலுக்குள் சென்று  உற்சவர் ரங்கநாதரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் கருடாழ்வார் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தாயார் சன்னதி அருகாமையில்  கம்பராமாயண பாராயணத்தை கேட்டார்.

அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார். இன்று ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தியுள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்கு தளம் அருகாமையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

மேலும் ரங்கநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோணக்கரை முருகன் கோவில் மற்றும் உத்தர வீதி பகுதிகளில் பரதநாட்டிய கலைஞர்கள், குச்சிப்புடி நடன கலைஞர்கள் தப்பாட்டக் கலைஞர்கள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரங்கா ரங்கா கோபுரம் முன்பு 40 நாதஸ்வர கலைஞர்களின் நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது. இந்த வரவேற்பினை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு காரில் கையசைத்தவாறு சென்றார். 

பிரதமர்  வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்.பி.ஜி) மேற்பார்வையில் 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  உடன் இருந்தனர். 

பிரதமர் வருகையை முன்னிட்டு ஏற்கனவே கோவில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிரதமர் கார் மூலம் செல்லும் பாதையில் 500 மீட்டர் சுற்றளவுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2:30 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமான மூலம் ராமேஸ்வரம் புறப்படுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com