தொப்பூரில் நடந்தது விபத்தல்ல, கொலை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தின் காரணமாகவே தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)
அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தின் காரணமாகவே தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் புதன்கிழமை (ஜன.24) மாலை 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

தொப்பூர் பகுதியில் புதன்கிழமை நடந்ததை விபத்து என்று கூற முடியாது. மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்றுதான் கூற வேண்டும்.  

சில ஆண்டுகளுக்கு முன்பு தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்திலும் 4 பேர் உயிரிழந்தனர். 400 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 

இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமான விபத்துகள் நடந்ததில்லை. இந்த விபத்துகளுக்கு தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு முக்கிய காரணமாகும். இந்த சாலையின் வடிவமைப்பை மாற்றக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் கூட எழுதவில்லை. 

அந்தவகையில் பார்க்கையில், தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல, மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்றுதான் கூற வேண்டும். எனவே இதனைத் தடுக்க தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தினை உடனடியாக தொடங்க வேண்டும். 

மேலும் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com