வெள்ளம் சூழ்ந்து 38 நாள்கள்.. வெள்ளாளன்விளை மக்களின் சொல்லொணா துயரம்

வெள்ளம் சூழ்ந்த 38 நாள்கள் ஆனநிலையிலும், இதுவரை தங்களது வீடுகளை சூழ்ந்த வெள்ளம் அகற்றப்படாமல் உள்ளது.
வெள்ளம் சூழ்ந்து 38 நாள்கள்.. வெள்ளாளன்விளை மக்களின் சொல்லொணா துயரம்


தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடுமையான வெள்ளம் சூழ்ந்த 38 நாள்கள் ஆனநிலையிலும், இதுவரை தங்களது வீடுகளை சூழ்ந்த வெள்ளம் அகற்றப்படாமல், வெள்ளாளன்விளை பகுதி மக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உடன்குடி பகுதியிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிராமமே வெள்ளாளன்விளை. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக இந்த கிராமத்துக்கு அருகே இருக்கும் சடயநேரி குளம் நிரம்பி, வெள்ளம் சூழ்ந்தது.

சுமார் 13 அடிக்கு வெள்ளம் நிரம்பியது. சில இடங்களில் இது 20 அடி வரைத் தொட்டது. அப்போது வீட்டை விட்டு வெளியேறி தெரிந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள், நாள்தோறும் தங்களது வீடுகளை வந்துப் பார்த்துச் செல்கிறார்கள்.

சுமார் 2 தெருக்களில் 23 குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்த வீடுகள் முற்றிலும் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. இன்னமும் வெள்ளம் வடிந்தபாடில்லை. அதிலிருக்கும் பொருள்களைக் கூட மீட்க முடியாமல், அப்படியே விட்டுவிட்டு வந்தவிட்டனர். மண் வீடுகள் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கி தரைமட்டமாகிவிட்டன. கல் வீடுகளும் இன்னும் ஓரிரு நாள்களில் விழுந்துவிடும் நிலையில்தான் உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

சுமார் 500 ஹெச்பி திறன் கொண்ட ஏழு கனரக மோட்டார்களை வைத்து 30 நாள்களுக்குள் வெள்ள நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், சில நாள்களுக்கு முன்பு மோட்டார் நிறுவனங்கள் தங்கள் மோட்டார்களை தங்கள் தேவைகளின் காரணமாக திரும்பப் பெற்றன. "ஒரு மாத காலமாக நடந்த நீரை அகற்றும் பணிக்கு பின், ஆறு அடிக்குத்தான் நீர்மட்டம் குறைந்துள்ளது. இன்னும், ஒரு மாதத்திற்கு மோட்டார்கள் பொருத்தி, குக்கிராமத்தை சூழ்ந்திருக்கும் வெள்ளத்தை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். சூழ்ந்திருக்கும் வெள்ளத்தால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் இவ்விடம் மாறியுள்ளது," என்கிறார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

இத்தனை நாளும் அப்பகுதியிலிருந்த பல இடங்களில் தங்கியிருந்தோம். பஞ்சாயத்து போர்டு சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய நிதி இல்லாமல் தற்போது உணவும் நிறுத்தப்பட்டுள்ளது. இனி நாங்கள் தெரிந்தவர்களின் வீடுகளில் அகதிகள் போலத்தான் செல்ல வேண்டும் என்று வேதனைப்படுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

மாவட்ட நிர்வாகம் தங்களது பிரச்னையை கவனத்தில் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் மோட்டார்களைக் கொண்டு வெள்ளத்தை வடியவைத்து புதிய வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்எ ன்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதனை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் முடியவில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.

இது குறித்து வெள்ளாளன்விலை பஞ்சாயத்துத் தலைவர் ராஜரத்தினம் கூறுகையில், இந்த வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதியில் நீரை அகற்றும் பணியானது பயனற்றதாக இருகிறது. காரணம் மற்ற இடங்களில் இருந்து தண்ணீர் இப்பகுதிக்கு வர ஆரம்பித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 2ம் தேதி திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த அமைதிக் கூட்டத்தில், தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகளைச் சுற்றி, 1,000 மணல் மூட்டைகள் அமைக்க, 1 லட்சம் ரூபாய் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தண்ணீரை நிறுத்துவதற்கான நடவடிக்கையும் தோல்வியடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21 நள்ட்களுக்கு உணவு வழங்க சமூக ஆர்வலர்களிடமிருந்து இருந்து 3.5 லட்சத்தை பெற முடிந்தது. தண்ணீரை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் கொளுத்தும் வெயிலின் கீழ் வெள்ள நீர் ஆவியாகத்தான் வேண்டும்”என்று விட்டுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com