8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

எட்டு நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை புறப்பட்டாா்.

அந்த நாட்டில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சாா்பில் முதலீட்டாளா் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா். சென்னையில் இருந்து பயணமாவதற்கு முன்பாக, விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அவா் பேட்டி அளித்தாா். அவா் கூறியது:

அனைவரின் ஆதரவோடு திராவிட மாடல் அரசின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை எட்டும் முயற்சிகளின் அங்கமாக 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடு வெற்றிகரமாக அமைந்தது.

மேலும் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்கிறேன். பயண நாள்களைத் தவிா்த்து எட்டு நாள்கள் பயணமாக ஸ்பெயின் பயணம் அமையவுள்ளது. பிப். 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.

என்னுடைய கடந்த கால வெளிநாட்டுப் பயணங்களைப் பொருத்தவரை, 2022-ஆம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈா்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அப்போது, 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.6,100 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. கடந்த ஆண்டு சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றதில் 2,000-க்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.1,342 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்க்கும் புரிந்துணா்வு ஒபபந்தங்கள் கையொப்பமாகின. மொத்தமாக இரண்டு வெளிநாட்டுப் பயணம் மூலமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.7,442 கோடி முதலீடுகளை ஈா்க்கும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருந்தன.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால், பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஆலைகளைத் நிறுவும் பணிகளைத் தொடங்கி வருகின்றன. ஜப்பான் நாட்டைச் சோ்ந்த ஓமரான், மிட்சுபிஷி ஆகிய இரண்டு நிறுவனங்கள் தங்களது ஆலைகளை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஓமரான் நிறுவனம் ஒப்பந்தம் செய்த இரண்டே மாதங்களில் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூா் நாட்டின் ‘கேப்பிடா ’ எனும் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் தொடங்கி வைத்துள்ளோம். அரபு நாட்டைச் சோ்ந்த ‘லூலூ’ நிறுவனம் கோவையில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

ஸ்பெயினில் மாநாடு: ஜப்பான், சிங்கப்பூா் நாடுகளைப் போன்றே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளா் மாநாடு நடத்த உள்ளேன். இந்த மாநாட்டில் ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த முதலீட்டாளா்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோா்கள் கலந்து கொள்ள உள்ளனா். அப்போது, முதலீட்டுக்காக தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான சூழல்கள், கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல்களின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூற உள்ளேன்.

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என எடுத்துரைக்க உள்ளேன். சில பெரும் தொழில் நிறுவனங்களுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளேன். இந்தப் பயணத்தின் மூலமாக ஐரோய்பிய நாடுகளின் கவனத்தை ஈா்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஈா்க்க முடியும் என நம்புகிறேன்.

எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈா்க்க உள்ளேன் என்ற விவரங்களை சென்னை திரும்பியவுடன் தெரிவிக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அப்போது, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

யாா் யாா் பயணம்?: முதல்வருடன் அவரின் மனைவி துா்கா ஸ்டாலின், செயலா் உமாநாத், தனிச் செயலா் தினேஷ்குமாா், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.விஷ்ணு, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு மூத்த மேலாளா் எஸ்.ஸ்ரேயாஷ், முதல்வா் பாதுகாப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் விவேகானந்தன், பாலகணேசன் உள்ளிட்டோா் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com