நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நியாய விலைக் கடைகளுக்கு உரிய எடையுடன் பொருட்களை அனுப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்  வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு உரிய எடையுடன் பொருட்களை அனுப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

DIN

நியாய விலைக் கடைகளுக்கு உரிய எடையுடன் பொருட்களை அனுப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பொது விநியோகத் திட்டத்தின்மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதிலும், நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் சரியான அளவில், நியாயமான விலையில், தரமானதாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும், நுகர்வோரின் குறைகளைக் களைவதிலும் மாநில அரசின் பங்கு மிக முக்கியமானதாகும்.

குறிப்பாக, இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கணினிமயம் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவை 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக அனுப்பப்படுகின்றன என்றும், ஒவ்வொரு மூட்டையிலும் 4 முதல் 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளதாகவும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், எடைக் குறைவாக அனுப்பப்படும் மூட்டைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அரசே இதுபோன்று எடை குறைவாக பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பினால், அந்த எடைக் குறைவினை சரி செய்ய பொதுமக்களுக்கு குறைவான எடையில் பொருட்களை வழங்கும் சூழ்நிலை நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும். அரசாங்கமே எடை குறைவாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை அனுப்புவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

முதல்வர், இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளிலிருந்து நியாய விலை கடைகளுக்கு உரிய அளவில் உரிய பொருட்கள் சென்றடையவும், நியாய விலைக் கடைகளிலிருந்து மக்களுக்கு உரிய அளவில் உரிய பொருட்கள் சென்றடையவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.