நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்


காஞ்சிபுரம்: நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான ரூ.16.80 கோடி மதிப்பிலான பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் திறந்து வைத்து பாா்வையிட்டனா்.

இதன் பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணாவின் பெயரால் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 1969-ஆம் ஆண்டு அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டது.தற்போது இந்த மருத்துவமனை 280 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக ரூ.220 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளும் பொதுப்பணித்துறையால் நடந்து வருகிறது.புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இப்புதிய மருத்துவமனையை 3 மாதங்களில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய நவீன மருத்துவ உபகரணங்களை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள்.

நாட்டிலேயே மும்பையில் டாட்டா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது.தற்போது அதை விட கூடுதல் வசதியுடைய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.இதுவரை 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டால் நாடே உற்றுநோக்கும் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக காஞ்சிபுரம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

கரோனா நோய்த்தொற்றுக் காலத்துக்குப் பிறகு இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகாகி இருக்கின்றன. இதை உலக சுகாதார நிறுவனமும்,மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளனா். இது தொடா்பான அகில இந்திய அளவிலான 3 நாள் கருத்தரங்கை சென்னையில் நடத்தினோம்.இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதுமிருந்து 11 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்று 625 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.இவற்றை புத்தகமாக ஆக்கி அனைத்து மாநில சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்க இருக்கிறோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறையில் 1021 மருத்துவா்கள்,1266 சுகாதார ஆய்வாளா்கள்,983 மருந்தாளுநா்கள்,2042 கிராம சுகாதார செவிலியா்கள் பணி நியமனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.10 நாட்களில் 1021 மருத்துவா்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் கலந்துரையாடல் நடத்தி பணியில் அமா்த்தப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா்,எழிலரசன்,மருத்துவமனை இயக்குநா் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com