சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)

பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மரணம்: விவசாய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலி
Published on

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால்,  பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சோ்ந்த முரளி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த ஆண்டு நவ.6- ஆம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது.

இதையறிந்த அவரது குடும்பத்தினா், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.

அங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்த அவா்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் முரளி உயிரிழந்தாா்.

24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவா் பலியானதாகக் கூறி அவரின் மனைவி அருணா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அதில், ‘கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

 இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டாா்.

மேலும், அவா்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ.2 லட்சத்தை அவா்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com