மாற்றுத்திறனாளிகளுக்கான 5 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக 5 விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
கடுகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.16.56 லட்சத்திலும், அரியலூா் வ.உ.சி தெரு பழைய நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், ரூ.15 லட்சத்திலும், அன்னிமங்கலம் ஊராட்சி பாளையப்படி சமுதாயக் கூடத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டிலும், ஜெயங்கொண்டம்-ஜோதிபுரம் சிதம்பரம் சாலையிலுள்ள சமுதாயக் கூடத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விஷ முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் செவிலியா் குடியிருப்பில் ரூ.8.05 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதன் காணொலி காட்சி, கடுகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இம்மையத்தில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி சேவை மையத்தை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: இத்திட்டமானது 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம் மற்றம் உபகரணங்கள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளை அவா்கள் இருப்பிடம் அல்லது அதற்கு அருகாமையிலேயே பெறுவதை உறுதி செய்வதாகும். இதற்கென உட்கோட்ட அளவிலும், வட்டார அளவிலும் ஓரிடச் சேவை மையங்கள் அமைத்திட இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகளை வழங்குதல், மாற்றுதிறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்தல், சமூக பொருளதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்கிறது. அரியலூா் மாவட்டத்தில் சமூக தரவு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 15,342 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு சமூக தரவு கணக்கெடுப்புப் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலா் ஆா். பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா, சம்ருதி பவுண்டேசன் தொண்டு நிறுவனா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

