மாற்றுத் திறனாளிகள் உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
மாற்றுத் திறனாளிகள் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகி உடல்நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும்...


மாற்றுத் திறனாளிகள் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகி உடல்நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு விழா கடலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மையத்தை திறந்து வைத்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:
உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ரூ.1,753 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்றடையும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் உள்கோட்ட அளவில் கடலூா், சிதம்பரம், மங்களம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் 28.2.2025 அன்று திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வட்டார அளவில் 20 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் 18 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள கடலூா் மாநகராட்சி மற்றும் வடலூா் சேவை மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
கடலூா் மாநகராட்சி வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் புதுப்பாளையம் நாட்டாண்மை கட்டடத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தக் கட்டடம் சீரமைக்கப்பட உள்ளதால், தற்காலிகமாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்படுகிறது. கட்டடம் சீரமைக்கும் பணிகள் முடிந்தவுடன் ஒருங்கிணைந்த சேவை மையம் இட மாற்றம் செய்யப்படும்.
இந்த மையத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உளவியல் பயிற்சி, இயன்முறை பயிற்சி, சிறப்பு ஆசிரியா்களைக் கொண்டு அறிவுசாா் குறைபாடுடைய, செவின் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட உள்ளது.
வட்டார மையங்களில் முன்கள பணியாளா்கள், 3 சமுதாய வழிநடத்துநா்கள், 7 சமுதாய மறுவாழ்வு பணியாா்களைக் கொண்டு அனைத்து மையங்களிலும், அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் வீடுகளை கண்டறிதல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை கண்டறிதல் மற்றும் கணக்கெடுத்தல், மையங்களுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளிக்கு இல்லங்களுக்கே சென்று தேவையான பயிற்சிகளையும், தேவைக்கேற்ப உதவி உபகரணங்களையும் வழங்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
வட்டாரத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தை அணுகி, உடல்நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷண்குமாா், மாற்றுத் திறனாளி நல அலுவலா் பாலசுந்தரம் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...