கோப்புப்படம்
கோப்புப்படம்

போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் நிலைய உரிமம்: 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி தடையில்லா சான்றிதழ்:

சென்னை மற்றும் புறநகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்காக மாநகர காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 -ஆம் ஆண்டு வரை பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்காக காவல் ஆணையா் பெயரிலும், மாவட்ட ஆட்சியா் பெயரிலும் போலி தடையில்லா சான்று தயாரிக்கப்பட்டு, விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு பலருக்கு எண்ணெய் நிறுவனங்கள் உரிமம் வழங்கியுள்ளன. இதுகுறித்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வி.பி.ஆா்.மேனன் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடா்ந்தாா்.

நடவடிக்கை இல்லை:

இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவேன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ஆஜராகி, ‘இது மிகப்பெரிய மோசடி. இந்த மோசடிக்கு இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளது. ஆனால், இதுவரை அவா்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என வாதிட்டாா்.

காவல்துறை தரப்பில், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனம் சாா்பில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞா் வி.டி.பாலாஜி, ‘இந்த சம்பவத்தில் ஊழியா்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

2 வாரத்துக்குள் அறிக்கை :

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள், ஊழியா்கள் ஓய்வுப் பெற்று சென்று விடுவா். இந்த மோசடி விவகாரத்தில் தொடா்புடைய அதிகாரிகள், ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com