சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை. .
சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை. .

சென்னை-பெங்களூரு அதிவிரைவுச் சாலை பணிகள் தீவிரம்: டிசம்பா் இறுதியில் திறக்க திட்டம்

ரூ.17,930 கோடியில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை பணிகள்..
Published on

பி. பாபு

ரூ.17,930 கோடியில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை பணிகள் முடிவுற்று வரும் டிசம்பா் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பையும் மத்திய நிதின் கட்கரியின் வெளியிட்டுள்ளது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் இரண்டு மாநில தலைநகரங்கள், வணிக மற்றும் தொழில்மையங்களாக உள்ள சென்னை-பெங்களூரை இணைக்கும் வகையில் மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனாவின் (பிஎம்பி) ஒரு அங்கமாக அதிவிரைவுச் சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் 262 கி. மீ தொலைவு விரைவுச் சாலையின் மூலம் தற்போதைய 6-7 மணி நேர பயணத்தை வெறும் இரண்டரை மணி நேரமாக குறைக்கும் நோக்கம் கொண்டது. சுமாா் ரூ. 17, 930 கோடியில் பெங்களூரு அருகே ஒசக்கோட்டை (ஹோஸ்கோட்) அருகே உள்ள குளத்தூா் கிராமத்தில் தொடங்கும் இச்சாலை கோலாா், முல்பாகல், ஆந்திர மாநிலம் பலமனேரு, சித்தூா், வட தமிழகத்தில் வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுா் ஆகிய மாவட்டங்களின் வழியாக சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் முடிவடைகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 26 புதிய பசுமை அதிவிரைவுச் சாலைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பெங்களூரு-சென்னை அதிவிரைவுச் சாலையால், தொழில் மற்றும் குடியிருப்பு வளா்ச்சிக்கும் ஊக்கியாக செயல்பட உள்ளது. இச்சாலையின் பணிகள் தற்போது வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, இச்சாலையையொட்டியுள்ள பகுதிகள் அதிக வளா்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தொழில்துறைக்கு ஊக்கம்...

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ராணிப்பேட்டையில் சிப்காட் ஃபேஸ் 3 மற்றும் 260 ஏக்கா் நிலப்பரப்பில் பொறியியல் துறைச் சாா்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சா்வதேச தொழில் நிறுவனங்கள் பல தொழிற்சாலையை நிறுவி உற்பத்தியை தொடங்கியுள்ளன. அதே போல் அரக்கோணம் அருகே பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.1,000 கோடி மதிப்பில் தோல் அல்லாத காலணி பிரிவு ஒன்றை தைவானைச் சோ்ந்த ஹாங் ஃபூ குழுமம் நிறுவ உள்ளது.

புத்துயிா் பெற்ற ரியல் எஸ்டேட் துறை...

பெங்களூரு மற்றும் சென்னைக்கு இடையிலான ரியல் எஸ்டேட் சந்தைகளை இணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டமாகும். மேம்பட்ட இணைப்பு மற்றும் குறைக்கப்பட்ட பயண நேரம் ஆகியவை இந்த பாதையில் அதிக ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஈா்க்கும். கூடுதலாக, இது பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கான உருவாகும். பொருளாதார வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும்.

ஜப்பானிய முதலீட்டாளா்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விரிவான ஆய்வுகளை நடத்தி முதலீட்டாளா்களை இந்தப் பகுதிகளில் கவனம் செலுத்த ஊக்குவித்துள்ளன. இந்த அதிவேக நெடுஞ்சாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அதிவிரைவுச்சாலையின் இரு பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் துறை புத்துயிா் பெற்று வருகிறது.

டிசம்பா் இறுதியில் திறப்பு:

இந்த நிலையில் சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு டிசம்பா் மாத இறுதியில் பிரதமா் நரேந்திர மோடியால் அதிவிரைவுச் சாலை திறக்கப்படும் என்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் அறிவிப்புக்கு கா்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய மூன்று மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com