விக்கிரவாண்டி: 82.48% வாக்குப் பதிவு; ஜூலை 13-இல் வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவானது.
வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்
வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 82.53 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலிலும் கிட்டத்தட்ட அதே அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து, ஜூன் 14-ஆம் தேதிமுதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு, 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. 56 வேட்பாளர்கள் 64 மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

2.37 லட்சம் வாக்காளர்கள்: 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 42 பதற்றம் நிறைந்தவையாகவும், 3 மிகவும் பதற்றம் நிறைந்தவையாகவும் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் கடந்த 8-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல்முதல் வாக்குப் பதிவுக்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளத் தொடங்கியது.

வாக்குப் பதிவு தொடக்கம்: வாக்குப் பதிவு தினமான புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி சரிபார்க்கப்பட்டது. பின்னர், காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா தனது சொந்த ஊரான அன்னியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பொ.அபிநயாவுக்கு விழுப்புரம் பேரவைத் தொகுதியில் வாக்குரிமை இருப்பதால், அவர் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை.

ஆர்வத்துடன் வாக்களிப்பு: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், வேம்பி, கஞ்சனூர், அசோகபுரி, காணை, நேமூர், முட்டத்தூர், ஒரத்தூர், கொட்டியாம்பூண்டி, சிந்தாமணி, அய்யூர் அகரம், தொரவி, பனையபுரம், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் ஆர்வமாக காத்திருந்து வாக்களித்தனர்.

வெயில் தாக்கத்தால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பல வாக்குப் பதிவு மையங்களில் கூட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில், பின்னர் கூட்டம் அதிகரித்தது.

விறுவிறுப்பான வாக்குப் பதிவு: காலை 9 மணி நிலவரப்படி, 12.94 சதவீத வாக்குகளும், முற்பகல் 11 மணி நிலவரப்படி 29.77 சதவீத வாக்குகளும், பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்ததும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் "சீல்' வைக்கப்பட்டன. தொடர்ந்து, மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனங்களில் கொண்டு சென்றனர். இவை அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் வாக்கு எண்ணிக்கை மையத்திலுள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com