காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது: துரைமுருகன்

என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நெடிய காவிரி பிரச்சினையைக் கையாண்டு வருகிறேன்.
அமைச்சர் துரைமுருகன்(கோப்புப்படம்)
அமைச்சர் துரைமுருகன்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள புனித மரிய தெரேசா அரசினர் நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 81 மாணவ - மாணவியருக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 15) காலை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று ஆணையம் தெரிவித்தது. ஆனால், ஒரு டிஎம்சி-யைக்கூட தரமாட்டேன் என கர்நாடக அரசு அடம்பிடித்தது. நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் என சொல்கிறார்கள்.

ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்து 574 கன அடி தண்ணீர். கர்நாடகத்தில் உள்ள அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால் ரொம்ப நல்லது. கொடுக்க வேண்டும் எனச் சொன்னாலும் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வந்து தான் ஆக வேண்டும்.

காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது. என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நெடிய காவிரி பிரச்சினையைக் கையாண்டு வருகிறேன். கர்நாடகத்துக்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com