மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

நிகழாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிகழ் நிதியாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், ஓய்வூதியம் பெறும் முதியோா்களின் எண்ணிக்கை 35.70 லட்சமாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Published on

இது குறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வருவாய்த் துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்க திட்டமாகக் கருதப்படுவது, இலவச வீட்டுமனைப் பட்டாக்கள். கடந்த 3 ஆண்டுகாலத்தில் மட்டும் 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, பட்டா மாற்றத்துக்கான விண்ணப்பத்தை எங்கிருந்தும் எந்த நேரமும் செய்யலாம் என்பதன் அடிப்படையில் 2 ஆண்டுகளில் 41,81,000 பட்டா மாறுதல்கள் இணையவழியில் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக 80,000 போ்: தமிழ்நாட்டில் மொத்தம் 186 நகரங்கள் உள்ளன.

இந்த நகரங்கள் குறித்த படங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 179 நகரங்களுக்கான படங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 நகரங்களைப் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பழைமையான ஆவணங்களை ஒளி பிம்பமாக நகலெடுக்கும் பணிகள் ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவைத் துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 9.40 லட்சம் தாள்கள் ஒளிபிம்பம் எடுத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

வருமானம், ஜாதி உள்ளிட்ட வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்களை மாணவா்கள் படிக்கும் பள்ளிகளிலே பெற்று வருகிறாா்கள். இந்தச் சான்றிதழ்கள் உள்பட அரசின் இணையதளம் மூலமாக 26 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டுகளில் மட்டும் 2.75 கோடி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் முதியோா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ. 1,200-ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 85,000 கூடுதலாகச் சோ்க்கப்பட்டு மொத்தம் 34.90 லட்சம் போ் பயன்பெற்று வருகின்றனா். மேலும், புதிதாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளாா். அதன்படி, அவா்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

பட்டாக்கள் வழங்குதல்: சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன், அவற்றில் 2 முதல் 3 ஏக்கா் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. உரிய முறையில் இணையத்திலும் பதிவு செய்து அளிக்கப்படுகிறது. ஒருவா் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி விற்பனைக்காக மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் மனைகள் போட்டிருக்கலாம். அவ்வாறான மனைகளைப் பதிவு செய்யும்போது மனை வாரியாக பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com