சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சருடன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை ஓட்டப் பயிற்சி மேற்கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி தலைமையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர், சென்னையில் இன்று நடைபெறும் ’இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்’ என்ற மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில், பெசன்ட் நகரில் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன், அப்துல்லா பின் டூக் மற்றும் ஐக்கிய அரபு நாட்டினர் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து, அனைவரும் தேநீர் அருந்தினர்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்துல்லா கூறியதாவது:
“தமிழக அமைச்சருடன் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டது மகிழ்வான தருணம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகள், மிகப்பெரிய பொருளாதார உறவுகளில் ஒன்றாகும்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இருநாட்டின் வர்த்தகத்தில் 15% அதிகரித்துள்ளது. நிறைய முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன.
சென்னையில் இன்று ஒரு மாநாடு நடக்கிறது, எனவே தொழில்துறையில் உள்ள அனைவரையும் அழைக்கிறோம். புதிய பொருளாதாரங்களைப் பற்றி பேச உலகை ஒன்றிணைக்க விரும்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.
இன்று சென்னை மாநாட்டில் பங்கேற்கும் அப்துல்லா, நாளை காலை கேரள மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.