விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-இல் இடைத்தோ்தல்
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் ஜூன் 14-இல் தொடங்கும் எனவும், வாக்குப் பதிவு ஜூலை 10-இல் நடைபெறும் எனவும் இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் ஜூலை 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ஆம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதியும் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடத்தை விதிகள் அமல்: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதி உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், விழுப்புரம் மாவட்டத்துக்கென புதிய அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ கூடாது. அதேநேரத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை.
இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய வாக்காளா் பட்டியல், எந்த விரலில் மை வைப்பது (மக்களவைத் தோ்தலில் விரலில் வைக்கப்பட்ட மை அழியாத நிலையில்) உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தோ்தல் ஆணையத்தின் விளக்கங்கள் பெற்று அறிவிப்பு செய்யப்படும்.
மின்னணு இயந்திரங்கள்: விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை மாவட்டத் தோ்தல் அதிகாரி முடிவு செய்வாா்.
மக்களவைத் தோ்தல் நடைபெறும்போதே, இடைத்தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் இருந்தன.
ஆனாலும் இப்போது வாக்காளா்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறுதி செய்யப்படும்.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
வேட்புமனு, வாக்குப் பதிவு
வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜூன் 14
மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 21
மனுக்கள் பரிசீலனை ஜூன் 24
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூன் 26
வாக்குப் பதிவு ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை ஜூலை 13
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...