விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்


விவசாயிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என்பதற்காக டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலன் கிடைப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த குறுவை தொகுப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் ஆகியவை வெகு குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய 24 மணி நேர மும்முனை மின்சாரம் தேவை என்ற நிலையில், மும்முனை மின்சாரம் பற்றி ஏதும் தெரிவிக்காதது விவசாயப் பெருமக்களிடையே மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
ஆழ்துளை கிணறு இல்லாத நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. காவிரியில் நமக்குள்ள நீரை கேட்டுப் பெறாததன் காரணமாக கிட்டத்தட்ட 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
காவிரி நீரை நம்பி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எவ்விதமான நஷ்டஈடும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயம். இதன் காரணமாக, இந்த ஆண்டு நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தவிர, கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யப்படவில்லை.
இதிலிருந்து, விவசாயிகள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, அனைத்து உழவர்களுக்கும் மிகப் பெரிய திட்டத்தை அறிவித்ததுபோல திமுக அரசு விளம்பரப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையான மானியத்துடன் வழங்கவும், இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற முடியாத பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், காவிரியில் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...