பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம்!

தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்த உடனே தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம்!
Published on
Updated on
2 min read

பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து கடந்த ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம்.

ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும், அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையப்பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம்!
அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆா்வம்! ராகுல் பிரசாரம் எதிரொலி!

இதுதொடர்பாக பேசிய நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான மதுசூதன் ரெட்டி ”நிலத்தை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்தவுடன் ஆன்லைன் பட்டாவை உடனடியாக இணையத்தில் பார்த்துப் பதிவிறக்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட சொத்தினை விற்பவரின் பெயரில் தனிப்பட்ட பட்டா இருந்தால் மட்டுமே பெயர் மாற்றம் ஏற்படும். அதேபோல, அந்த சொத்தின் பரப்பளவும் மாறாமல் இருக்கவேண்டும்” என்று கூறினார்.

மேலும், “ ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் துணை சார் பதிவாளர் அலுவலகங்களில் 85,000 ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில், உட்பிரிவு செய்யத் தேவைப்படாத ஆவணங்கள் 33,000 இருக்கின்றன. நிலம் வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யும்போது எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பத்திரப்பதிவு முடிந்து, பெயர் மாற்றம் ஆனவுடன் அதனைத் தெரியப்படுத்த வாங்குபவருக்கும் விற்பவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

சொத்து விற்பவர்கள் பெயரில் பட்டா இல்லையென்றால் வாங்குபவர்கள் இ-சேவை மையம் மூலம் பட்டா பெற விண்ணப்பிக்க வேண்டும். அது 15 நாட்களில் அங்கீகரிக்கப்படும். உட்பிரிவு செய்யத் தேவைப்படும் பட்டா கோரிக்கைகளுக்கு, 30 நாட்களுக்குள் அதற்கான கணக்கெடுப்பை முடித்துத் தர வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டா பெறுவதற்கு வருவாய்த்துறைக்கு ஒரு மாதத்திற்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. முன்னர், நில அளவையர்கள் மற்றும் பணியாளர்கள் குறைவாக இருந்ததால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது, அந்த இடங்கள் நிரப்பப்பட்டதால் பட்டா வழங்கக் காலக்கெடு நிர்ணயித்துள்ளோம்.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தானியங்கி பட்டா பெயர் மாற்றும் வசதியில், உட்பிரிவு செய்யத் தேவைப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம்!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னணியில் பயிற்சி மையங்களா?

தானியங்கி நில பட்டா மாற்றம் செய்யும் வசதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை இணையதளங்கள் இணைந்து, இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பட்டா ஆவணத்தில் இணையதளத்தில் க்யூஆர் கோட் மூலம் சரிபார்க்கும் வசதி உள்ளதென்றும், அதிகாரப்பூர்வ சான்று இல்லாமலும் ஆன்லைன் பட்டா செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com