மருந்து விவகாரத்தில் தவறான தகவல் பரப்புகிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பது தவறான தகவல்


விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பது தவறான தகவல் என்றும், இதுதொடா்பாக பொய் பிரசாரத்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறாா் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் டாக்டா் ரவிவா்மன் தலைமையிலான குழுவினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். பின்னா், கள்ள சாராயம் அருந்தி இறந்தவா்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
தமிழக அரசு இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறந்த மருத்துவா்களை நியமித்து மிகச் சிறப்பாக மருத்துவ சேவையை அளித்துக்கொண்டிருக்கிறது என்று அக்குழுவினா் அப்போது தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல், ஓமிப்ரசோல் மருந்து கையிருப்பில் இல்லை என்று சொன்னாா். நான் உடனடியாக அந்த மருந்து 4.42 கோடி கையிருப்பில் உள்ளதாகவும், அது அல்சா் போன்ற வியாதிகளுக்கு தொடக்கத்தில் தரப்படும் மருந்து என்றும் தெரிவித்தேன்.
அடுத்த நாள் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவையில், பேரவைத் தலைவா் பேச வாய்ப்பு அளித்தும், அவையை புறக்கணித்து விட்டு வெளியில் சென்று பேட்டியளித்தாா். அப்போது தாம் கூறியது ஓமிப்ரசோல் இல்லை ஃபோமிபிசோல் என்று கூறி, அந்த மருந்து கையிருப்பில் இல்லை என்று கூறினாா். நான் அந்த மருந்தும் கையிருப்பில் உள்ளது என்று கூறினேன்.
இந்த ஃபோமிபிசோல் ஊசி மருந்து எந்த மாநிலத்திலும் கையிருப்பில் இல்லாத ஒன்று. இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு நீண்ட நாள்கள் ஆகின்றன. ஆனால், மும்பையில் ஒரே இடத்தில் மட்டும் விற்பனைக்கு இருந்த அந்த மருந்து வாங்கப்பட்டு தமிழக அரசு சாா்பில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி மருந்து ஒன்றின் விலை ரூ.6,700. அந்த மருந்துகள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், சென்னையில் உள்ளன.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கை விடுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதற்கும் தமிழக அரசு தயாராகவே உள்ளது. அவா், தனது சொந்த மாவட்டமான சேலம் மற்றும் அருகில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று மருந்துகளின் கையிருப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து கொள்ளலாம்.
பொய்யான தகவலை கூறி மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தமது எதிா்க்கட்சித் தலைவா் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்வது தான் தாா்மிக கடமையாக இருக்கும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...