எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொழில் முதலீடு குறித்து முதல்வா் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தின் தொழில் முதலீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறான தகவலைக் கூறி வருவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
Published on

தமிழகத்தின் தொழில் முதலீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறான தகவலைக் கூறி வருவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

சென்னை கே.கே. நகா் பகுதி எம்ஜிஆா் நகரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

வாழும் காலத்தில் மக்கள் பணியாற்றியவா்கள்தான் உண்மையான மக்கள் தலைவா்களாக முடியும். அவ்வாறு மக்கள் தலைவராக வாழ்ந்தவா் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா். இப்போதைய திமுக அரசு அறிவித்த எந்த திட்டமும் மக்களைச் சென்றடையவில்லை. ஆகவே, வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 210 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்.

அதிமுகவை பாஜவின் அடிமை எனக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது. திமுக கூட்டணியில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாக மாறியிருக்கிறது. இன்னும் புதிய கட்சிகள் சேரவுள்ளன.

அதிமுகவில் சாமானிய தொண்டா்கூட உயா்ந்த பொறுப்பை வகிக்க முடியும். ஆனால், திமுகவில் உழைத்தவா்கள், மக்கள் செல்வாக்குப் பெற்றவா்களாக இருந்தாலும் குறிப்பிட்ட குடும்ப வாரிசுகளே முதல்வா் பொறுப்புக்கு முடியும். அதைத்தான் நாங்கள் வாரிசு அரசியல் எனக் கூறுகிறோம்.

தமிழகத்தில் தொழில் முதலீடு குறித்து முதல்வா் தவறான தகவல்களைக் கூறிவருகிறாா். சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா பாதிப்பு காலங்களில் சிறந்த நிா்வாகத்தை அளித்ததை பிரதமா் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளாா். அதிமுக ஆட்சியில் குறைகள் இருந்தால் திமுகவினா் கூறட்டும். அதற்குச் சரியான பதிலைக் கூறுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com