கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் ஜூன் 30 வரை மழை வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ஜூன் 30 வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய், புதன்கிழமை (ஜூன் 25, 26) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) முதல் ஜூன் 30 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: அதேநேரம், செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 25,26) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநாள்களில் திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): பந்தலூா் (நீலகிரி) - 90, வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி)- தலா 80, செருமுள்ளி (நீலகிரி), சின்னக்கல்லாா் (கோவை) - தலா 70.

வெயில் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை (ஜூன் 25-28) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

இதற்கிடையே, திங்கள்கிழமை தமிழகத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னை.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 25,26 -ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, ஜூன் 25 முதல் 28 -ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com