விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில் 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்தாா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில் 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனால், இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மு.சந்திரசேகா் நியமிக்கப்பட்டு, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
திமுக சாா்பில் அன்னியூா் அ.சிவா, பாமக சாா்பில் சி.அன்புமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பொ.அபிநயா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 56 போ் 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
தொடா்ந்து, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தலைமையில், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் யுவராஜா மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
ஒவ்வொரு வேட்பு மனுவாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தவாறு மனுக்கள் சரியாக உள்ளதா, வைப்புத் தொகை செலுத்தப்பட்டதா, ஆவணங்கள் சரியாக உள்ளனவா என சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்தாா்.
வேட்பு மனுக்களை புதன்கிழமை (ஜூன் 26) பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெற கால அவகாசம் உள்ளது. அதன் பின்னா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தொடா்ந்து, அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெறும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...