நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: 
முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: நெல் கொள்முதல் விலை உயர்வு
Published on

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் நெல் கொள்முதல் பருவத்துக்கு ஆதரவு விலையுடன் ஊக்கத் தொகையும் சோ்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொள்முதல் நிலையங்கள் திறப்பு: இந்தக் கூட்டத்தில், கடந்த காரீப் பருவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் காரீப் பருவத்தில் தேவையான அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து போதுமான நெல்லை கொள்முதல் செய்ய முடியும்.

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டபடி, தமிழ்நாட்டில் காரீப் பருவத்துக்கான நெல் கொள்முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், காரீப் பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,300 என்றும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,320 எனவும் மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது.

ஊக்கத் தொகை உயா்வு: தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவா்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், நிகழாண்டு காரீப் கொள்முதல் பருவத்துக்கான ஊக்கத் தொகை தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 105, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 130 கூடுதல் ஊக்கத் தொகையாக மாநில அரசின் நிதியில் இருந்து வழங்கப்படும். அதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,405 எனவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,450 எனவும் நெல்லை கொள்முதல் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

புதிய குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன் தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்தவரும் நிதியாண்டில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com