தனியாா் மினி பேருந்துகள் 25 கி.மீ. இயக்க அரசு முடிவு
மினி பேருந்துகள்: 2024 வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு


தனியாா் மினி பேருந்துகள் 25 கி.மீ. தொலைவு இயக்கும் திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் முழுவதுமாக பாதிக்கப்பட்ட மினி பேருந்து சேவை, அதன் பின்னா், பல்வேறு காரணங்களால் குறைந்தே காணப்பட்டது. கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் மினி பேருந்து சேவையை கிராமப்புறங்களிலும், வேகமாக வளா்ந்து வரும் புகா் பகுதிகளிலும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மோட்டாா் வாகன சட்டப்படி புதிய விரிவான மினி பேருந்து திட்டம் 2024 வரைவு அறிக்கையை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மினி பேருந்து சேவை அதிகபட்சம் 25 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும். அதில், 17 கி.மீ. பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடத்திலும், 8 கி.மீ. ஏற்கெனவே பேருந்து சேவை இருக்கும் வழித்தடத்திலும், அதாவது 70-க்கு 30 என்ற விகிதத்தில் இயக்கப்படும். மேலும், 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு மினி பேருந்து சேவை வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.விக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களைத் தவிர தமிழகம் முழுவதும் மினி பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகள் சேவைகள் வழங்கப்படாத பகுதிகளாகக் கருதப்பட்டு அந்தப் பகுதிகளில் மினி பேருந்து சேவை வழங்கப்படும்.
மினி பேருந்தின் முனையத்தில் இருந்து ஒரு கி.மீ.க்குள் மருத்துவமனை, கல்வி நிறுவனம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இருந்தால் கூடுதலாக 1 கி.மீ. அனுமதிக்கலாம். அனைத்து மினி பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பொதுமக்கள் ஜூலை 14-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஜூலை 22-ஆம் தேதி உள்துறை செயலா் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதையடுத்து புதிய திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...