7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
நிகழாண்டில் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினா்கள் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக சமுதாய முதலீட்டு நிதி பொருளாதாரக் கடன் உதவியாக வழங்கப்படும். நிகழாண்டு 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். இதற்காக மொத்த தொகை ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
40,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.90 கோடியில் வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.30 கோடி செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காட்சி: சுய உதவிக் குழு உறுப்பினா்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளா் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி 200 வட்டாரத்தில் ரூ.6,083 ஊராட்சிகளில் ரூ.4.65 கோடி செலவில் அளிக்கப்படும்.
சென்னை போன்ற பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாடிக்கையாளா்கள் மத்தியில் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய மாவட்டத்துக்கு தலா 5 சமுதாய வளப் பயிற்றுநா்கள் உருவாக்கப்பட்டு, 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.15 மதிப்பீட்டில் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.