தமிழகத்தில் சென்னை, தஞ்சை, திருச்சி உள்பட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட "ஹிஸ்புத் தஹ்ரீர்' என்ற இயக்கத்துக்கு தமிழகத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட 12 இடங்களில் அந்த இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள், தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் இ.பி. காலனி பகுதியைச் சேர்ந்த கபீர் அகமது (40) என்பவரின் வீட்டில் என்ஐஏ டிஎஸ்பி குமரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கபீர் அகமதுவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில்...: தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் மகன் அகமது (36) என்பவரது வீட்டில் என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையில் 4 பேரும், தஞ்சாவூர் அருகே மானாங்கோரை முதன்மை சாலையைச் சேர்ந்த என். ஷேக் அலாவுதீன் (68) வீட்டில் என்ஐஏ அதிகாரிகளும் காலையில் தொடங்கி சுமார் 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கைப்பேசிகள், ஹார்டு டிஸ்க்-குகள், பென்}டிரைவ்கள், டிவிடி, சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிச் சென்றனர்.
மேலும், தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் அப்துல் ரகுமான் (26), காந்திஜி சாலையைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (45) வீடுகளிலும் என்ஐஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டு, சில பொருள்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, அப்துல் ரகுமானையும், முஜிபுர் ரஹ்மானையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்கள் இந்திய அரசமைப்பு, ஜனநாயகம், சட்டம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றுக்கு எதிரான மனநிலையை இளைஞர்களிடம் ஏற்படுத்த வகுப்புகளை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டையில்...: தஞ்சை சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (51). இவர் வேலை செய்து வரும் புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே வடகாட்டிலுள்ள ரபியுல்லா என்பவரின் தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு என்ஐஏ அதிகாரி விஷ்ணுசங்கர் தலைமையில் வந்த 8 பேர், சுமார் இரண்டரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.தொடர்ந்து, அப்துல்காதரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரிடமிருந்து கைப்பேசி, சிம் கார்டு ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.
திருச்சியில்: தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட அப்துல் ரகுமானின் உறவினர் ஜமால் முகமதுவின் வீடு திருச்சி சுப்பிரமணியபுரம் பெரியார் தெருவில் உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு அப்துல் ரகுமான் வந்து சென்றதால், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்துல் ரகுமானுடன் ஜமால்முகமது வீட்டுக்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
இதில், அவரது கைப்பேசிகள், சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை விசாரணைக்காக கைப்பற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பின்னர் அப்துல் ரகுமானை தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு பிறகே தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவரும் எனவும், இதன் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட சோதனை மற்றும் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.