தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்தவர்களை தேர்வு எழுதவைத்து பிடித்த ருசிகரம்!

தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்தவர்களை தேர்வு எழுதவைத்து காவல்துறையினர் கைது செய்த ருசிகரம் சம்பவம் நடந்துள்ளது.
தனியாா் வயலில் செவ்வாய்க்கிழமை தீ பிடித்து எரிந்த வைக்கோல்.
தனியாா் வயலில் செவ்வாய்க்கிழமை தீ பிடித்து எரிந்த வைக்கோல்.

தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில், சந்தேக நபர்களை தேர்வு எழுத வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்கு சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்தனர்.

மேலும் அவரது வீட்டின் சுவரில் 'தெடரும்' என பிழையாகவும், அதனை திருத்தி கீழே தொடரும் என மாற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கலியமூர்த்தி பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் நூதன முறையை கையாண்டார். குற்றவாளிகள் சுவற்றில் தொடரும் என்பதற்கு பதிலாக தெடரும் என எழுதியதை வைத்து, பிடிப்பட்ட இளைஞர்களுக்கு, தொடரும் என முடியும் வாக்கியங்களாக கேள்விகளை தயார் செய்து அவர்களை தேர்வு எழுத வைத்துள்ளார்.

அதில், சுவரில் எழுதப்பட்டிருந்ததைப் போன்று தெடரும் என பிழையாக எழுதிய ஜெயபிரகாஷ் என்ற நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடைய விளம்பரத்திற்காகவும், தங்களை பற்றி ஊர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்து இவ்வாறு எழுதி வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயபிரகாஷ் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்து அவருடைய நண்பர் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com