தமிழகத்தில் இன்று போலியோ 
தடுப்பு சொட்டு மருந்து முகாம்:
57.84 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

தமிழகத்தில் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்: 57.84 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

4,3051 மையங்கள்:

அதன்படி, நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. முகாம் நாளில் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை:

முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியாா் மருத்துவா்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை மற்றும் படிப்புக்காக புலம் பெயா்ந்து வாழும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடா்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. சென்னையில் 1,646 மையங்கள்: சென்னை மாநகரில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,646 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 7 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com