மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், காவல் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா.

4 நடமாடும் கட்டுப்பாடு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை பெருநகர காவல் துறைக்கு 4 நடமாடும் கட்டுப்பாடு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சென்னை பெருநகர காவல் துறையை நவீனமயமாக்க பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக பெருநகர காவல் துறையை ‘மெகா சிட்டி’ திட்டத்தின் கீழ் 4 நடமாடும் கட்டுப்பாட்டு மையம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வேனில் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் மூலம் சென்னை முழுவதும் உள்ள 2,250 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை நேரலையில் காண முடியும். மேலும், இந்த வாகனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, காவல் துறையின் ட்ரோன்களை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து சரி செய்யவும் இந்தக் கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த வாகனங்கள் நகரம் முழுவதும் முக்கியமான பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்கள் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 4 நடமாடும் கட்டுப்பாடு மைய சேவையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், சென்னை காவல் துறையின் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com