திரையரங்கில் தவறவிட்ட தங்க காப்பு: குப்பையிலிருந்து மீட்டுக்கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்

திரையரங்கில் தவறவிட்ட தங்க  காப்பு: குப்பையிலிருந்து மீட்டுக்கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்

திரையரங்கில் தவறவிட்ட தங்க காப்பை குப்பையிலிருந்து மீட்டுக்கொடுத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட டன் குப்பைகள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள திரையரங்கு வளாகத்தில் நேற்று குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சேலம் உழவர் சந்தை அருகில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்து தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் திரையரங்கில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை, அதனால் ஏதேனும் இங்கு குப்பை சேகரிக்கும் போது கிடைத்ததா அல்லது இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட குப்பையில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர்.

சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பு கிடந்ததை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மணிவேல் கண்டு பிடித்ததார். இது தூய்மைப் பணியாளர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்து விட்டதாக தகவல் தரப்பட்டதையடுத்து அவர்கள் நேரடியாக திரையரங்கிற்கு வந்து தங்க காப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

தங்க காப்பை கண்டு பிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com