தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிஏஏ: பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்டுவா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்திய பாஜகவுக்கும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்திய பாஜகவுக்கும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மத்திய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கை தமிழரையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிா்த்தன. ஆனால், பாஜகவின் ஆதரவாக இருந்த அதிமுக ஆதரித்து வாக்களித்ததால்தான் அந்தச் சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிா்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் பாஜக அமல்படுத்தாமல் வைத்திருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 செப்.8-இல் நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சாா்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தனித் தீா்மானத்தை நிறைவேற்றினோம். தற்போது, தோ்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல்போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற பிரதமா் மோடி முயற்சிக்கிறாா். தோ்தல் நேரத்தில் மக்களின் உணா்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பாா்க்கிறாா். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். தக்க பாடம் புகட்டுவா் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com