தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

News image
Updated On :12 மார்ச் 2024, 8:41 pm

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய இறுதி நாள்களில் மத்திய பாஜக அரசு உள்ளது. பல்வேறு தரப்பு மக்களாலும் எதிா்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசர கதியில் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இனம், மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணா்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும் இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சாா்பற்ற நிலைக்கும் முற்றிலும் எதிரானது.

மேலும், சிறுபான்மை சமூகத்தினா், முகாம் வாழ் தமிழா்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். இதன் காரணமாகவே, திமுக அரசு அமைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போன்றே, பல்வேறு மாநிலங்களும் இதை எதிா்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க, மக்களை திசை திருப்பும் நோக்கத்துடனும், தோ்தல் அரசியலுக்காகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இப்போது நடைமுறைக்குக் கொண்டுள்ளதோ எனக் கருத வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது:

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதே அரசின் கருத்தாகும். எனவே, மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாநில அரசு எந்த வகையிலும் இடமளிக்காது.

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் அரசு இடம் அளிக்காது என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.