பொதுத் தேர்தலால் மாணவர்களுக்குக் கொண்டாட்டம்; பெற்றோருக்கு?

பொதுத் தேர்தலால் மாணவர்களுக்கு கொண்டாட்டம்; பெற்றோருக்கு?
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா?
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா?

ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மக்களவைத் தேர்தலால், கூடுதலாக 10 நாள்களுக்கு மேல் கோடை விடுமுறை கிடைப்பதால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஆனால், வீட்டில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெற்றோரும், பிள்ளைகளை பார்த்துக் கொள்பவர்களுக்குத்தான் திண்டாட்டமாக இருக்கும்.

ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவன்றே, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

எனவே, தேர்தல் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

வழக்கமான தேர்தல் அட்டவணையை எடுத்துக் கொண்டால், பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 22 வரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், தற்போது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பள்ளி ஆசிரியர்கள், வாக்குப்பதிவுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிந்ததும், அவர்கள் 23ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுவார்கள். மற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அதன்படி, பள்ளியில் கடைசி பணி நாள் என்பது ஏப்ரல் 26ஆம் தேதியாகும். மேலும், பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், பள்ளிகள் திறக்கப்படுவதும் தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது.

கடந்த ஆண்டும் கூட, கடும் கோடை வெப்பம் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒரு சில வாரங்கள் தள்ளிப்போயின. எனவே, இந்த ஆண்டு சூழ்நிலையை கருத்தில்கொண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டால், முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு எந்த சிரமும் இருக்காது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கனமழை, வெள்ளத்தின்போது ஒரு சில நாள்கள் அதிகம் விடுமுறை விடப்பட்டிருக்கும். ஆனால், பல பள்ளிகளில் முன்கூட்டியே பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மாணவர்களுக்கும் போதுமான அளவுக்கு படிக்க அவகாசம் கிடைத்துள்ளது. எனினும் ஒரு சில மாவட்டப் பள்ளிகளில் மட்டும் மாதாந்திர தேர்வுகள் சில விடுபட்டிருக்கும் என்கிறார்கள்.

அதுபோல, பத்து மற்றும் 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com