சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி முறிந்ததும், அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் மாறி மாறி, அவர்கள் ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றி, குற்றம் சொல்லுகிறார்களே? என்னவெல்லாம் பேசுகிறார்கள் என டி.வி.யில் பார்க்கிறோமே! அதையெல்லாம் இப்போது சொல்லி, இந்த மேடையின் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை!

ஆனால் சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கை கோத்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க! இது, மூத்த தலைவரான ராமதாஸுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்! ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ.க! சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியையே பா.ஜ.க. கவிழ்த்ததே!

இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ.க. செய்திருக்கிறது… அதை மறந்துவிட்டாரா?

பா.ம.க.வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-இல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பா.ம.க. பாடுபடும் என்று சொல்கிறார்!

நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? ராமதாஸ் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க.

இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிராரே?

இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்! நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது! அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது! மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும்! சென்சஸ் எடுக்க முடியாது! இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதிப் போராளியான ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை! தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com