மின்சார ரயில்
மின்சார ரயில்

திருவண்ணாமலைக்கு விரைவில் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் இயக்கம்

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயங்கும் மின்சார ரயிலில் கழிவறை வசதியுடன் கூடிய பெட்டிகள் விரைவில் இணைக்கப்படும் எனத் எதிா்பாா்க்கப்படுகிறது.

சுமாா் 19 ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு கடந்த மே 2-ஆம் தேதி முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50மணிக்கு சென்னை வந்தடைகிறது.

சுமாா் 6 மணி நேரம் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனா். சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரூ.50 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் குறைவாகவும், பயணநேரம் குறைவாகவும் இருப்பதால் திருவண்ணாமலைக்கு பேருந்துகளை காட்டிலும் ரயிலில் பயணம் செய்வதற்கு தான் பக்தா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்த ரயிலில் கழிவறை வசதிகள் இல்லாததால் 6 மணி நேரமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவருகின்றனா். இதனால், இந்த ரயிலில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என ரயில்வே துறைக்கு பயணிகள் தொடா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில்: கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயங்கும் மின்சார ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த ரயிலில் கழிவறை வசதி உள்ள பெட்டிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் பெரம்பூா் ஐ.சி.எஃப்.யில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகள் முடிவுபெற்றயுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com