

மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் நான்கு நாள்களுக்குப் பிறகு இயக்கப்பட்டது. வழக்கம்போல் இன்று காலை மலைரயில் புறப்பட்டுச் சென்றதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோ ரயில்நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்து ரயில் தண்டவாளத்தை மூடியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவையை கடந்த 18ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனால் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவையை கடந்த 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மீண்டும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று (22.5.24) முதல் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 4 நாள்களுக்குப் பின்னர் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியது. மலை ரயிலில் பயணம் செய்வதற்காக காலை முதலே சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.