உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்
Published on
Updated on
2 min read

தென்காசி: உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள் என்று புகழாரம் சூட்டினார் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 97-ஆவது திருக்குறள் விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்கத்திற்கு தலைமை வகித்து நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது:

தமிழகத்தின் மூத்த, பழைய இலக்கிய அமைப்பாக தென்காசி திருவள்ளுவர் கழகம் திகழ்ந்து வருகிறது. இலக்கிய அமைப்புகளைத் தோற்றுவிப்பது எளிது. ஆனால், அதை தொடர்ச்சியாக இலக்கியங்களையும், படைப்பாளர்களையும் மட்டுமே தாங்கிப் பிடிப்பதாக நடத்துவது சிரமம். அந்தவகையில் நீண்ட நெடுங்காலமாக இந்தக் கழகம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

SWAMINATHAN

தமிழுக்கு குறவஞ்சியைத் தந்தது இந்த மண். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலைக் கட்டியுள்ளார். அவர் ஒரு மன்னராக மட்டுமல்லாமல், ஒரு மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும் இருந்திருக்கிறார். நைடதம், வெற்றிவேற்கை உள்ளிட்ட நூல்களை அவர் படைத்தார். அந்த மன்னனுடைய ஆளுகைக்கு உள்பட்ட மண்ணில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தினுடைய வரலாறு உருவாகியுள்ளது.

புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பிறன் மனை நோக்காமை ஆகியவற்றை வள்ளுவர் முதன்மையாக குறிப்பிடுகிறார். இந்த மூன்றையும் கடைப்பிடித்தாலே ஒரு மனிதன் வாழ்வில் சிறந்து விளங்க முடியும். சங்க நூல்கள் வலியுறுத்திச் சொல்லாத சில விஷயங்களையும்கூட மிகச்சிறப்பாக வள்ளுவர் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார்.

உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதற்கு இணையான பொதுமறை உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. திருக்குறளை இலக்கியமாகப் படைக்காமல், மறையாகப் படைத்துச் சென்றுள்ளார் திருவள்ளுவர். ஐம்பெருங்காப்பியங்கள் திருக்குறளுக்கு பின்புதான் தோன்றின என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆங்கில மொழியின் வரலாறு சில நூறு ஆண்டுகள்தான். ஆனால், தமிழ் மொழியின் வரலாறு என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தைச் சேர்ந்தது. ஒரு மொழி என்பது திடீரென்று தோன்றிவிடாது. மொழி என்பது முதலில் சைகை பாஷையாகத்தான் இருந்திருக்கும்.

தமிழ் மொழி ஒலி வடிவமாகிய பின்பு அதன் நீட்சிக்கான முயற்சி குறியீடுகளும், குறியீடுகளின் குவியல்களாக பிறகு வரிசைப்படுத்தப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்துகளும் உருவாக்கப்பட்டு, அந்த எழுத்துகள் சொற்களாக்கப்பட்டு, அவை வாக்கியங்கள் ஆக்கப்பட்டன.

தமிழ் மொழியை திருவள்ளுவர் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். அதனால்தான் நமக்கு திருக்குறள் கிடைத்தது.

97 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தென்காசி திருவள்ளுவர் கழகம், நூற்றாண்டை கொண்டாடும்போது உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்களை அழைத்து திருவிழா போல கொண்டாட வேண்டும் என்றார் அவர்.

மாலையில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் தொழிலதிபர் எம்.ஆர்.அழகராஜா முன்னிலை வகித்தார்.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஆர்.ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆய்வரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினார். கம்பரும் திருவள்ளுவரும் என்ற தலைப்பில் தெ.ஞானசுந்தரமும், வள்ளுவம்-ஒரு எழுநிலை மாடம் என்ற தலைப்பில் சி.ராஜேந்திரனும் பேசினர்.

திருவள்ளுவர் கழகத் தலைவர் ந.கனகசபாபதி வரவேற்றார். துணைச் செயலர் இரா.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

வள்ளுவத்துக்கு பிரம்மாண்ட மாநாடு : தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேண்டுகோள்

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, உலகில் உள்ள அனைத்து திருவள்ளுவர் கழகங்களையும் அழைத்து பிரம்மாண்டமாக மாநாடு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

'திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் விழா எடுக்க வேண்டும் அல்லது மாநாடு நடத்த வேண்டும் என்றால் அதற்கு தகுதியான இடம் தென்காசி திருவள்ளுவர் கழகம்தான்.

இங்குதான் முதன்முதலில் திருக்குறளுக்காக தென்காசி திருவள்ளுவர் கழகம் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக, உலகில் உள்ள அனைத்து திருவள்ளுவர் கழகங்களையும் அழைத்து தென்காசியில் மாநாடு நடத்த வேண்டும் என்கிற எனது விருப்பத்தை தலைவர் வழக்குரைஞர் கனகசபாபதியிடம் வேண்டுகோளாக வைக்கிறேன்.

தென்காசியில் வழக்குரைஞர்களின் குமாஸ்தாக்கள் எல்லோரும் சேர்ந்து ஆரம்பித்ததுதான் தென்காசி திருவள்ளுவர் கழகம். அதுதான் இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவர் கழகங்களாக படர்ந்திருக்கிறது.

இங்கிருந்து போடப்பட்ட விதைதான் உலகம் முழுவதும் கம்பன் கழகங்களாகவும், திருவள்ளுவர் கழகங்களாகவும் பல்வேறு இலக்கிய அமைப்புகளாகவும் விரிந்து பரவிக் கிடக்கின்றன' என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com