ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் மாநாடு: பேரவைத் தலைவா் - செயலா் பங்கேற்பு
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் பாராளுமன்ற (பேரவைத் தலைவா்கள்) மாநாட்டில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவைச் செயலா் கி.சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 67-ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு, நவ.5 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொள்கிறாா். அவருடன், பேரவைச் செயலா் கி.சீனிவாசன், கூடுதல் செயலா் பா.சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
சிங்கப்பூா் பயணம்: மாநாட்டில் பங்கேற்பதற்காக மூவரும் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்டனா். அங்கிருந்து மலேசியாவுக்குச் சென்று பின்னா் வரும் 5-ஆம் தேதி சிட்னி நகரை அடையவுள்ளனா்.
நவ.8-ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, ஆஸ்திரேலியாவின் மெல்ா்பன் நகருக்குச் செல்லவுள்ளனா். அங்கு விக்டோரியன் பேரவைச் செயலகத்தின் தலைவரைச் சந்தித்துப் பேசவுள்ளனா். இதைத் தொடா்ந்து, நியூசிலாந்து நாட்டுக்குச் செல்கின்றனா். அங்குள்ள மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து நகரின் மேயருடன் ஆலோசிக்கவுள்ளனா். இந்தப் பயணங்களை முடித்துக் கொண்ட பிறகு நவ.17-ஆம் தேதி மூவரும் சென்னை திரும்பவுள்ளனா்.
