
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பிராமணா்களை பாதுகாக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே கடந்த 3-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக தெலுங்கு அமைப்பினா் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், அவா்கள் காவல் நிலையங்களிலும் தொடா்ச்சியாக புகாா் செய்து வருகின்றனா்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, மன்னர்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்றும், தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என அவர்களால் எப்படிச் சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டது.
தெலுங்கா்களை அவமரியாதையாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டிவலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச் செயலா் நந்தகோபால், எழும்பூா் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், கஸ்தூரி மீது அவதூறாக பேசுதல்,கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசுதல், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வ கையில் பேசுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், கஸ்தூரியிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனா்.
இதற்கிடையே, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் தமிழா் முன்னேற்றப்படை தலைவி கி.வீரலட்சுமி, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப் பதிய காவல்துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.