
மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் புதன்கிழமை வெடித்துச் சிதறியது.
ஜல்கான் மாவட்டத்தில் உள்ள எரண்டோல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த ஆம்புலன்ஸ் தாதா வாடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, என்ஜினில் இருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸை சாலையோரமாக நிறுத்திவிட்டு கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினரையும் வாகனத்தைவிட்டு இறங்கச் சொல்லி சிறிது தொலைவு தள்ளி நிற்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே ஆம்புலன்ஸ் தீப் பற்றி எறிய தொடங்கியவுடன், வாகனத்தில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு, ஆம்புலன்ஸ் பற்றி எறியும் காணொலியை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.