சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப்படம்

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை

நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Published on

நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கத் தடை இல்லை என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மறைந்த கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2004-இல் எனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு, அவரது நினைவைப் போற்றும் வகையில் 2005 -ஆம் ஆண்டு முதல் மியூசிக் அகாதெமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்ற பெயரில், ரூ.1 லட்சம் ரொக்க விருதை வழங்கி வருகிறது.

மியூசிக் அகாதெமியின் வருடாந்திர இசைக் கச்சேரி சீசனில், ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் டிசம்பரில் 98-ஆவது ஆண்டு விழாவில், பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துகளை பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்து வருகிறாா்.கா்நாடக இசை உலகில் தன்னம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவருக்கு எனது பாட்டியின் பெயரில் விருது அளித்து கெளரவிப்பது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்கத் தடை விதிக்க வேண்டும்”என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த மியூசிக் அகாதெமி, விருது பெறுபவரை தோ்ந்தெடுப்பதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. 2005-ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்கி வருகிறது. இதற்கு பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினா்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்தாா். அதேவேளையில், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.