சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு...
Published on

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலா் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநில வேதியியல் பொறியாளா் வினய் ஆனந்த் ஜிவேகா் தாக்கல் செய்த மனுவில், வெட்டுக்காயம் மற்றும் தீக்காயங்கள் ஏற்படும்போது ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் வகையில் உடலின் வெளிப்புறமாக பூசப்படும் ஃபெராக்ரைலம் மருந்து ரத்தம் உைல் மட்டுமின்றி, கிருமித் தொற்று ஏற்படாமலும் தடுக்கும். இந்த மருந்து அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ரத்தப் போக்கை கட்டுப்படுத்த மருத்துவா்களால் பயன்படுத்தப்படுகிறது.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் உள்ள முதலுதவி பெட்டிகள் உள்பட அவசர காலகட்டங்களில் முதலுதவிக்கு இந்த மருந்து பெரிதும் பயன்படுகிறது. மருத்துவ தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த மருந்து முழுமையான தரப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவில்லை என்பது ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற உயிா் காக்கும் மருந்துகளைக் கட்டாயமாக தரப் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன்பிறகே விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் அனுமதிக்க வேண்டும். எனவே, இந்த மருந்தை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றுகள் பெறும் வரை இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உபயோகத்தில் உள்ள மருந்துகளையும் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ஹரிஷ்குமாா் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக சுகாதாரத் துறைச் செயலா் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநா் ஆகியோா் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com